Sunday, March 25, 2012

பிரார்த்தனை

பிரார்த்தனை பிச்சைதான் . . .
பிச்சைக்காரர்கள்
வாசலிலும் வாசலுக்குள்ளும்.

வெளியிலிருப்பவன் சிறியதாய்க்கேட்கிறான்
அவன் சின்ன பிச்சைக்காரன்.
உள்ளிருப்பவன்தான் பெரியதாய்க்கேட்கிறான்
அவன் தான் பெரிய பிச்சைக்காரன்.

கேட்பதையெல்லாம்
கொடுக்கும் கடவுள் தான்
நம்மை
பிச்சைக்காரனாகவே வைத்திருக்கும்
பெருமைக்குரியவர்.

அவர் புனிதமானவரென்றால்
நாம் கேவலமானவர்கள்.

அவரை புனிதப்படுத்துவதற்காகவே
நாம்
கேவலப்பட்டுப்போனோம்.

கேள் தருகிறேன் . . .
பிச்சையெடு  கிடைக்கப்பெறுவாய் . . .
மதமும் கடவுளும்
கூசாமல் போதிக்கும்
வெட்கங்கெட்ட போதனைகள்.

இந்த வாழ்க்கை
ஏந்திய கைகளில் விழுந்ததல்ல . . .
இயங்கிய கைகளால்
எடுக்கப்பட்டது.

இந்த சுகங்கள்
கடவுள் வந்து கொடுத்தல்ல . . .
அறிவுள்ள மனிதன்
எடுத்தது.

பிறகேன் நம்மை
பிச்சை எடுக்கச்சொன்னார்கள்?

நீ உருவாக்கியவை
உனது உருவாக்கங்களிலை.
நீ சம்பாதித்தவை
உனது சம்பாத்தியமில்லை.
மதம்
உனது காப்புரிமையை
தனது பெயரில் மாற்றிக்கொள்ளும்
நூதன ஏற்பாடு.

கேள் தருகிறேன் . . .
பிச்சையெடு  கிடைக்கப்பெறுவாய் . . .

விபரம் தெரியாதவன்
பிச்சையெடுக்கிறான்.
விபரமுள்ளவன் - அவனை
சுரண்டி வாழ்கிறான்.
கடவுள் எதையுமே
கண்டுகொள்வதில்லை.