Sunday, April 22, 2012

மத வியாதி

மதம் ஒரு கொடிய வியாதி.
அது தோற்று வியாதியும் கூட.

மதக்கிருமிகள்
பரம்பரையாகவே கடத்தப்படுகின்றன.
எதிர்ப்பு சக்தி உள்ளவனையும் - அவை
எழிதில் வீழ்த்தி விடுகின்றன.

மதத்தால் பீடிக்கப்பட்டவன்
டிராகுலாவால் கடிபட்டவன்.
அவனும் டிராகுலாவாகிவிடுகிறான்.
அவன் தெருத்தெருவாய்த்
தேடி அலைகிறான் ரத்தம் குடிப்பதற்கு.

அவன் உன்னைக் கடிக்கிறான்
நீ என்னைக் கடிக்கிறாய்.
நான் இன்னொருவனைக் கடிக்கிறேன்.
இப்படித்தான்
டிராகுலாக்களின் சங்கிலி
துண்டுபடாமல் நீள்கிறது.

மதம் ஒரு கொடிய வியாதி.
அது தோற்று வியாதியும் கூட.


HIV பாதிக்கப்பட்டவளின் குழந்தையைக் கூட
HIV பாதிப்பில்லாமல் காப்பாற்றிவிடலாம்.
ஆனால்
மதத்தால் பீடிக்கபட்டவளின் குழந்தையை
தொற்றில்லாமல் காப்பது சாத்தியமில்லை.

எல்லா வியாதிகளுக்கும்
கட்டுப்படுத்தத்தான் மையங்களுண்டு.
மத வியாதிக்கு மட்டும்தான்
பரப்புவதற்கு மையங்களுண்டு.

வியாதியிலிருந்து விடுபட
நீயே நினைத்தாலும் முடியாது.
உன் தந்தையின் வியாதி
உனக்குமிருப்பதாய்
அரசாங்கமே சான்றிதழ் வழங்கிவிடும்.

வியாதியில் இருந்து நீ தப்ப முடியாது.

எலிகள் பிளேக்கைப் பரப்புகின்றன.
நாம் மதத்தைப் பரப்புகிறோம்.
எலிகள் நம்மைவிடவும் மேலானவை.

மதம் ஒரு கொடூரமான வியாதி.
அது பிறக்கும் முன்பே
நம்மேல் தொற்றிக்கொள்கிறது.
செத்தபின்னும் கூட
நம்மை விட்டுவிடுவதில்லை.




Sunday, April 8, 2012

மென்மையான வன்முறை

தொழுகை அடிமைத்தனம்
ஆசீர்வாதம் அடக்குமுறை.

தொழுகிறவன்
தன் சுயத்தை மறந்துவிடுகிறான்.
ஆசீர்வதிக்கிறவன்
உன் சுயத்தில் காரி உமிழ்கிறான்.

அடிமைப்படுவதில் பெருமைப்படுபவன்தான்
அடக்குமுறைக்கு அடிபணிகிறான்.

தொழுகிறவன்
தன் சுயத்தை
தானே கொன்று விடுகிறான்.
ஆசீர்வதிக்கிறவன்
உன் சுயத்தைக் கொலைசெய்கிறான்.

"நீயே கொன்று விடு . . .
இல்லையேல் கொல்லப்படுவாய்."

இதுதான்
கருணைபொங்கும் பார்வையோடு
கடவுள் விடுக்கும்
கொலைமிரட்டல்.

"நீயே கொன்று விடு . . .
இல்லையேல் கொல்லப்படுவாய்."

மதமும் கடவுளும்
உன்சுயத்தை
பொருட்படுத்துவதேயில்லை.
அவர்களுக்குத்தேவை ஒரு அடிமை.

உனக்கு சுயமிருந்தால்தானே
சுயமரியாதை இருக்க முடியும்.

மதம் உனது சுயத்தை
பக்குவமாய் அகற்றிவிடுகிறது.
உனது மூளையில்
சிந்திக்கும் பகுதி மட்டும்
செயலிழந்து போகும்.

இப்போது நீ ஒரு
மதத்துக்கு உட்பட்டவன்.
உனது மதத்தையோ
உனது கடவுளையோ குறைசொன்னால்
உனக்குக் கோபம் வரும்

இப்போது நீ ஒரு
பரிபூரணமான அடிமை.
மதம் சாதித்துவிட்டது.
நீதான் தோற்றுப்போய்விட்டாய்.

ஆனாலும்
அதை உன்னால் உணர முடியாது
உணரவே முடியாது.