Sunday, April 8, 2012

மென்மையான வன்முறை

தொழுகை அடிமைத்தனம்
ஆசீர்வாதம் அடக்குமுறை.

தொழுகிறவன்
தன் சுயத்தை மறந்துவிடுகிறான்.
ஆசீர்வதிக்கிறவன்
உன் சுயத்தில் காரி உமிழ்கிறான்.

அடிமைப்படுவதில் பெருமைப்படுபவன்தான்
அடக்குமுறைக்கு அடிபணிகிறான்.

தொழுகிறவன்
தன் சுயத்தை
தானே கொன்று விடுகிறான்.
ஆசீர்வதிக்கிறவன்
உன் சுயத்தைக் கொலைசெய்கிறான்.

"நீயே கொன்று விடு . . .
இல்லையேல் கொல்லப்படுவாய்."

இதுதான்
கருணைபொங்கும் பார்வையோடு
கடவுள் விடுக்கும்
கொலைமிரட்டல்.

"நீயே கொன்று விடு . . .
இல்லையேல் கொல்லப்படுவாய்."

மதமும் கடவுளும்
உன்சுயத்தை
பொருட்படுத்துவதேயில்லை.
அவர்களுக்குத்தேவை ஒரு அடிமை.

உனக்கு சுயமிருந்தால்தானே
சுயமரியாதை இருக்க முடியும்.

மதம் உனது சுயத்தை
பக்குவமாய் அகற்றிவிடுகிறது.
உனது மூளையில்
சிந்திக்கும் பகுதி மட்டும்
செயலிழந்து போகும்.

இப்போது நீ ஒரு
மதத்துக்கு உட்பட்டவன்.
உனது மதத்தையோ
உனது கடவுளையோ குறைசொன்னால்
உனக்குக் கோபம் வரும்

இப்போது நீ ஒரு
பரிபூரணமான அடிமை.
மதம் சாதித்துவிட்டது.
நீதான் தோற்றுப்போய்விட்டாய்.

ஆனாலும்
அதை உன்னால் உணர முடியாது
உணரவே முடியாது.

3 comments:

Anonymous said...

தைரியமான வார்த்தைகள்

சாய் ராம் said...

தைரியமான வார்த்தைகள்

Sumankavi said...

Thank you Sai sir and Anonmous